Thursday, November 10, 2011

பதஞ்சலி தனியன்

பதஞ்சலித் தனியன்கள்
எங்கேயந்த இறைவனென்று வந்தகேள்வி ஒண்ணாலே
இங்கேயென்று சொன்னான்கண்ண தாசனவன்பண்ணாலே
பாங்காய்நன்று விஸ்வநாதன் அமைத்தஇசையின் தன்னாலே
பாகாய்க்காதில் பாயும்சுந்தர் ராஜன்குரல் தேனாலே
வீணாய்ப்போகா துங்கள்நேரம் இதனைக்கேட்ப தனாலே

"பாசமுள்ள பார்வையுமே கடவுள் தானடா
கருணையுள்ள அந்தநெஞ்சும் கோயில் தானடா"
சொன்னதிங்கு நானுமில்லை வேறு யாரடா
இன்றும் நெஞ்சில் உறையும் கண்ண தாசனேயடா ..!






---------------------------------------------------------------------------

இறைக் காட்சி

பதஞ்சலி பணிந்துநீ
அமிழ்தினில் அமிழ்ந்துநீ
சுவைத்துநீ உளம்களி
மனம்தனில் படும்ஒளி


----------------

பதஞ்சலி பதம் பணிந்து
பயின்றிடு யோகம் நன்று
செய்திடு த்யானம் சென்று
எழுந்திடும் ஒளியும் ஒன்று
நின்றிடும் சஹஸ்ரக் குன்று
சென்றிடும் இருள கன்று
பெற்றிடும் அருளைக் கொண்டு
வென்றிடு எமனை இன்று

----------------

மோகத்தை விட்டெறிந்து
போகத்தை விட்டொழித்து
தாகத்தை பெற்றெழுந்து
யோகத்தில் பட்டிரு நீ
மேகத்தை சுட்டெரித்து
ஞாலத்தில் ஒளி கொடுக்கும்
சூரியன் போல் விளங்கு
பாரினில் பயன் கொடுத்து..!

----------------

சிக்கெனக் கொள்ளநெஞ்சின் உள்சென்று தேடல்விட்டு
திக்க்கெனத்தெரியாக் காட்டில் வெளியினில் சென்றுதேடும்
போக்கினை விட்டொழித்து வெளியுறு மன்மனத்தை
யோகத்தில் பட்டிழுத்து தாரணை தானும்கொண்டு
தொண்டுறு அவ்வைப்பாட்டி அகவலில் சொல்லிச்சென்ற
குண்டலி அசபைதன்னில் விண்டெழு மந்திரத்தால்
சென்றெலி வளையின்உள்ளே சுருண்டிரும் பாம்பேயன்ன
மூலத்தின் கீழ்சுருண்ட விசையினை நீஎழுப்பி
த்யானச்ச மாதிகொள்ள காலனும் சென்றுஓயும்
மோனத்தின் மூர்த்தியான ஈசனின் பதம்எழுமே

----------------

விண்ணகத்தைக் கடந்ததான சபையிலாடும் பொற்பதம்
கண்ணகத்தை நிறைப்பதான பிறையில்கூடு மேஇதம்
பெண்ணகத்தில் அரையதாக உடையதாகும் மெய்நிதம்
தன்னகத்தில் கொண்டநெஞ்சில் அமைதியாடு மேசதம்

--------------

கூழுக்கு உப்பழகு நுதல் விளங்கு நீறழகு
மலர்க்கழகு மணமிருக்கு வேழமுகமழகு கணபதிக்கு
பளிங்குவானில் நிலவழகு சிலிர்க்கும்வண்ணச் சிறகழகு
விலங்குநெஞ்சம் விலகப்பெறின் துலங்குசிவன் பேரழகு..!


--------------


ஆசைகொல்லஆசைகொண்டு சேவைநீயும் புரிந்திடு
பூசையென்று மற்றெதுவும் செய்திடாமல் போவது
*காசேயல்ல ஈசனருள் சேவையினால் கிட்டுது
வீசும்நல்ல தென்றலாக அமைதியும்தான் கூடுது

*காசேயல்ல = குற்றமல்ல



இறை மாட்சி

அருள்மழையால் அணையுமுந்தன் அகமெனும் கனல்சூடு
அதில்கரைந்து தரையுமாகும் நீயோர் மணல்மேடு


--------------

வந்ததுன்பம் மறைந்திடநீ கடவுள்தாளைப் பணிந்திடு
அந்ததுன்பம் மறைந்திடாயின் பொறுமைகொண்டு முயன்றிடு
நிற்கும்துன்பம் நீங்கிடாமல் நிற்கச் செய்ததாவது
உந்தன்திறனில் அவனும்கொண்ட நம்பிக்கையால் தானது

--------------

உலகமயக்கம் கொண்டநெஞ்சம் கடவுளிடம் செல்லுமே
கலங்கும்நெஞ்சம் மகிழ்வுறவே வேண்டுவன கேட்கவே
துலங்கும்நெஞ்சம் கேட்டிடாமல் சென்றடையும் தஞ்சமே
விளங்கும்பரமன் அருள்புரிவான் தேவைக்கினி பஞ்சமே

--------------

காலம்கடக்க உயர்ந்தமருந்தும் பயனில்லாமல் போகுது
சூலன்நினைக்க உயர்ந்தநெஞ்சின் கருமவினையும் சாகுது
பாலம்எனவே அமைந்தயோகம் பழகிநீயும் நின்றிடு
ஞாலம்படைக்கும் உமையின்பாகன் அருளைவேண்டி அழுதிடு
--------------

வளத்தநிலமும் வறுத்தவிதையை முளைத்திடவா செய்யுது
எலியின்வளையில் யானைபலத்தால் நுழைந்திடவா முடியுது
வினையின்விதையும் சூக்குமமாய் இருந்திருக்க லாயினும்
இமயமுறையும் ஈசனருளில் முளைத்திடாமல் செத்திடும்

--------------

எலியின்வளையில் நச்சுப்பாம்பு நலமாய்ச்சென்று வாழுது
புலியும்நரியின் குகையில்சென்று உல்லாசமாய்த் தூங்குது
வலிமையொன்றே இதற்குஅங்கு காரணமாய் அமையுது
எனினும்இறையின் அருளைப்பெற எளிமைபோது மானது

--------------

வறண்டநிலத்தில் முளைத்துவிதையும் செடியுமாகக் கூடுமோ
திரண்டவெண்ணை எழுந்துமீண்டும் பாலுக்குள்ளே செல்லுமோ
பொளிந்தகல்லில் காலம்கடந்து நிற்கும்உருவம் போன்றது
அளிந்தநெஞ்சின் யோகத்தாலே ஜோதிநின்று ஒளிர்வது

*அளி = அன்பு

--------------

ஈசன் வரும் வேளை .. வருகுதிங்கு நாளை ..!

ஸ்வாமிஸ்வாமி என்னுமபோது கண்ணில்நீரும் முட்டுதா ?
நம்மில்நம்மில் என்றுநீயும் அவனைஎண்ணச் சொல்லுதா ?
விம்மிவிம்மி அவனைஎண்ண அழுகையும்தான் பொங்குதா ?
பைத்தியம்நான் ஆகியதேன் என்றகேள்வி எழுகுதா ?
வைத்தியமும் தேவையில்லை மகிழ்ந்துநீயும் நில்லடா
சத்தியத்தின் அன்புத்தந்தை நெஞ்சில்வரும் நாளடா..!

--------------

ஈரமின்றி அன்பிலாது வரண்டிருக்கும் நெஞ்சாலே
ஈரம்கொண்டு குளித்துக்கூறும் மந்திரத்தின் பண்ணாலே
கோரும்வண்ணம் பூசைகொண்ட தீபதூப மொண்ணாலே
தீருமுந்தன் நெஞ்சம்கொண்ட ஆவல்என்று எண்ணாதே

இருந்தபொருளை இல்லாதவர் பயன்படவே தந்தாலே
வருந்துவோர்க்கு அன்புகொண்டு இரண்டுவார்த்தை சொன்னாலே
விரைந்தவனும் உடன்வருவான் நீஅழைக்கத் தன்னாலே
மகிழ்ந்திடுவான் பூசையில்நீ சூட்டும்பூவின் ஒண்ணாலே..!

துன்பமே இன்பம் - இன்பமே துன்பம்

நோயின்வேகத் தாலேஇனிப்பும் கசந்திடத்தான் செய்யுது
மனதிலமைதி குலையப்பஞ்சும் முள்ளாய்த்தானே குத்துது
இறையின்அணுக்கம் உலகஇன்பம் துன்பமாயத்தான் தெரியுது
மறைந்துபன்மை ஒருமையாக இன்பமலை மோதுது


--------------

உலகஇன்பம் முதலில்என்றும் இன்பத்தையே கொடுக்குது
பழகப்பாலும் புளிப்பதுபோல் இன்பம்சலித்துப் போகுது
பிழியும்துன்பம் கழியநெஞ்சும் இறையினிலே இருக்குது
அழகுக்கண்ணன் கோவிந்தனைக் குந்திவேண்டிக் கேட்டது
இன்பமல்ல துன்பம்தனை இதனாலேயே தானது

--------------

விலக்குமுணவை உண்டவயிறு உப்புசத்தில் வீங்குது
இலவிலான பஞ்சணையும் முள்ளைப்போலக் குத்துது
உருளுமம்மிக் குழவிபோல உடலும்புரண்டு தவிக்குது
உருண்டதுன்பம் புரண்டஉடலில் உணவைச்செரிக்கச் செய்யுது
புரிந்தசெயலின் விளவுதீர்க்க துன்பமிங்கே உதவுது
இருண்டமனதும் துன்பம்கொண்டு ஒளியைப்பெற்றுத் தெளியுது
திரண்டஇன்பம் கடைசியிலே கொண்டுவந்து சேர்க்குது

--------------

அன்னம் பிரம்மா - உடலே கோயில்

ஆன்மமுந்தன் உடலுமான சேற்றில்உறையும் தாமரை
அதற்குமந்த உடலுமாகும் சோற்றில்வளர்ந்த தோர்உறை
என்றிடாது அதனைதெய்வக் கோயிலாக நீநினை
மறந்திடாது வந்துமாவான் இறைவனுமே உன்துணை

--------------

இரையினாலே கனத்தவயிறால் உயிரும்போக நேருது
இரையில்கவனம் இல்லாதிருக்க இறையின்நினைப்பு வீணதே
இரையில்இறையை மறந்ததாக தோணும்மனித குணமது
இரையில்இறையை மறைந்ததாகக் காணும்யோகி மனமது

--------------

வாழும்வீட்டைக் கல்லாய்மண்ணாய் பார்ப்பதில்லை போலவே
வீழுமுடலை எலும்பாய்ச்சதையாய் போகம்கொள்ளும் கருவியாய்ப்
சேர்த்துராமல் வலம்புரியான் த்ந்தைவாழும் கோயிலாய்
பார்த்திருக்கும் நெஞ்சிலென்றும் அமைதித்தென்றல் வீசுமே..!

வைராக்கியம்

எதிர்க்குமெந்தப் பொருளும்திடத்தின் வைரத்தினா லாகியும்
விதிர்த்துநிற்க வைக்கும்யோகி கொண்டநல்வை ராக்கியம்
துதிக்கவைக்கும் யமனைக்கூட மதிக்கவைக்கும் உயர்வையும்
அதுகொடுக்கும் வகையிலாகும் என்னேசித்தன் பாக்கியம்..!

ஆறறிவு

இச்சைப்பட்டு பெற்றசோறு காகம்பகிர்ந்து உண்ணுது
எச்சைபட்ட கையால்ஓட்ட மனிதமனம் மறுக்குது
பிச்சைகொள்ளும் செல்வனாக ஆறறிவு விளங்குது
நற்செயலில் ஆறுமிங்கு ஐந்தின்முன்னே குறையுது..!

--------------


மயிலின்தோகை ஆட்டம்கண்டு கானகமே மகிழுது
குயிலதிடும் முட்டையுமே காகமடை காக்குது
வெய்யில்பட்ட உயிர்களுக்கு மரம்குடையாய் நிற்குது
நாயும்கொண்ட நன்றியாலே நல்லபெயர் வாங்குது

நாலுந்தெரிந்த மனிதநெஞ்சம் தன்னலமே தேடுது
வயமிழந்த ஆறின்மாட்சி ஐந்தினாலே அழியுது*
எமன்பிடுங்கும் உயிர்தனையே நிரந்தரமாய் எண்ணுது
திறம்படைத்த ஆறுமிங்கு ஐந்தின்முன்னே குறையுது**

** ஆறு = ஆறாவது அறிவு , ஐந்து = ஐம்புலன்

** ஆறுமிங்கு ஐந்தின் முன்னே குறையுது = ஆறறிவு கொண்ட மனிதன் ஐந்தறிவின் முன் குறை உற்றதாகிறான்


--------------

நடந்ததை மறந்திருப்போம் 
நடப்பதை நினைத்திருப்போம்
கிடைத்ததை கொடுத்திருப்போம் 
கிடைப்பதில் மகிழ்ந்திருப்போம்
படைத்ததை கொடுத்திருக்கும்
விடத்துடை ஈசன்பாதம்
கிடைத்திட நெஞ்சில்துய்யும் 
அழுக்கினைத் துடைத்தெடுப்போம்

அன்பே சிவன்
நல் லறிவேஅவன்
யாண்டும் இதை
நெஞ்சில் மறவாதவன்
மீண்டும் இனி
மண்ணில் பிறவாதவன்

----------------------------------------------------------------------------








1 comment:

  1. கண்ணதாசனின் வாரிசு சோடை போகவில்லை. அற்புதமான மொழிபெயர்ப்பு. வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு.

    ReplyDelete