Saturday, November 5, 2011

முடிவல்ல தொடக்கம்


மெய் கொண்டு மெய் தேடு
பொய்யான உடல் , புலன், மனம் மீது ஆளுகை கொண்டு மெய்யான இறைவனைத் தேடுதல் யோகம் ஆகும்

மெய்யானது பொய்யானது மெய்யாது மெய்யானது 
மெய்யானது செய்யும்அது மெய்யானது செய்யாதது 
செய்யாதது செய்யாதது மெய்யானது மெய்யானது
பொய்யாதது பெய்யாதது பெய்யாதது பொய்யாதது

உடம்பானது நிலைத்திருக்கும் உண்மையானதல்ல. உடல்கொண்ட சேர்க்கையினால் அது உடலாக உண்டானது.
சத்யஸ்வரூபமான இறைவன் படைக்கும் அந்த உடல்/ஜீவன் ,   (மனதின் அறியாமையால புலன் மயக்கத்தால்)  உண்மையான நற்செயல்களை செய்யாமல் இருக்கின்றது.
செய்யலாகாததை (செயலை) செய்யாமல் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே உண்மையாக விளங்கி இருந்து  ( சத்யமான இறையைத் தேடி அறிய உதவிப் பின் ) ஜீவாத்மா பரமாத்மாவாக ஆகச் செய்து விளங்குகின்றது.
சத்யமான அந்த ஆத்மா ( புலன் வழியே தன்னைச்) செலுத்தாது. இதுவரை பெய்யாத அருள் மழை (மெய் ஞானம் பெற்று ஆன்மமே உண்மை என்று அறியுங்கால் ) பொய்க்காமல் பெய்கின்றது.

1
மெய்யானது பொய்யானது மெய்யாது மெய்யானது 

உடம்பானது நிலைத்திருக்கும் உண்மையானதல்ல. உடல்கொண்ட சேர்க்கையினால் அது உடலாக உண்டானது.

மெய்யானது   =      உடம்பானது 
பொய்யானது =      நிலைத்திருக்கும் உண்மையானதல்ல 
மெய்யாலது     மெய்யால் + அது
                                                 உடல்கொண்ட சேர்க்கையினால் அது 
மெய்யானது   =      உடலாக உண்டானது 
  
2
மெய்யானது செய்யும்அது மெய்யானது செய்யாதது 

சத்யஸ்வரூபமான இறைவன் படைக்கும் அந்த உடல்/ஜீவன் , (மனதின் அறியாமையால புலன் மயக்கத்தால்) உண்மையான நற்செயல்களை செய்யாமல் இருக்கின்றது
மெய்யானது  =       சத்யஸ்வரூபமான இறைவன் 
செய்யும்         =         படைக்கும்
அது                 =         அந்த உடல்/ஜீவன்
மெய்யானது  =         உண்மையான நற்செயல்களை
                                                      (மனதின் அறியாமையால புலன் மயக்கத்தால்)
செய்யாதது    =         செய்யாமல் இருக்கின்றது
3
செய்யாதது செய்யாதது மெய்யானது மெய்யானது
செய்யலாகாததை (செயலை) செய்யாமல் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே உண்மையாக விளங்கி இருந்து  ( சத்யமான இறையைத் தேடி அறிய உதவிப் பின் ) ஜீவாத்மா பரமாத்மாவாக ஆகச் செய்து விளங்குகின்றது.

செய்யாதது    =      செய்யலாகாததை (செயலை)
செய்யாதது    =      செய்யாமல் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே 
மெய்யானது  =      உண்மையாக விளங்கி இருந்து 
மெய்யானது  =     ( சத்யமான இறையைத் தேடி அறிய உதவிப் பின் )
                                      ஜீவாத்மா பரமாத்மாவாக ஆகச் செய்து விளங்குகின்றது.


4
பொய்யாதது பெய்யாதது பெய்யாதது பொய்யாதது
சத்யமான அந்த ஆத்மா ( புலன் வழியே தன்னைச்) செலுத்தாது. இதுவரை பெய்யாத அருள் மழை (ஞானத்தை உணர்ந்து ஆன்மமே உண்மை என்று அறியுங்கால் ) பொய்க்காமல் பெய்கின்றது.
பொய்யாதது =      சத்யமான அந்த ஆத்மா 
பெய்யாதது    =       ( புலன் வழியே தன்னைச்) செலுத்தாது 
பெய்யாதது    =      இதுவரை பெய்யாத அருள் மழை 
                                       (மெய் ஞானம் பெற்று ஆன்மமே உண்மை என்று
                                         அறியுங்கால் )
பொய்யாதது =     பொய்க்காமல் பெய்கின்றது 

-------------------------------------------------------

மேல் சொன்ன பாடலின் வார்த்தைகளை வேறு வரிசையில் (கீழ்கண்டவாறு ) அமைத்து எழுதப் பட்ட பாடல்.
Line 1 - Word 1,5,9,13 (Column 1) 
Line 2 - Word 2,6,10,14 (Column 2)
Line 3 - Word 3,7,11,15 (Column 3)
Line 4 - Word 4,8,12,16 (Column 4)

மெய்யானது மெய்யானது செய்யாதது பொய்யாதது
பொய்யானது செய்யும்அது செய்யாதது பெய்யாதது
மெய்யாலது மெய்யானது மெய்யானது பெய்யாதது
மெய்யானது செய்யாதது மெய்யானது பொய்யாதது

உண்மையான பரமாத்மா உடம்பிலுறையும் ஆத்மாவாக ஆனது. அது செயல்களைச் செய்யாதது என்பது பொய்யல்ல உண்மையாகும்.

உடம்பானது செய்கின்ற செயல்களை செய்யாமல் நிற்கும் ஆத்மா புலன் வழித் தன்னைப் பெய்யாதது    (வெளிச் செலுத்தாதது).

மெய்ப்பொருளாம் இறைவனால் உண்டான ஆத்மா உடலினின்று பிறந்ததல்ல.

உண்மையை ( தேடலாகிய செயலை) செய்ய முடியாமல் மீண்டும் உடம்பாக தோன்றுகின்ற ஜீவாத்மா இறைவனுடைய அம்சம் (பரமாத்மா வினின்று தோன்றியது ) என்பது பொய் இல்லாத உண்மையாகும்.

1
மெய்யானது மெய்யானது செய்யாதது பொய்யாதது

உண்மையானபரமாத்மா உடம்பிலுறையும் ஆத்மாவாக ஆனது. அது செயல்களைச் செய்யாதது என்பது பொய்யல்ல உண்மையாகும்.

மெய்யானது = உண்மையானபரமாத்மா
மெய்யானது = உடம்பிலுறையும் ஆத்மாவாக ஆனது
செய்யாதது = அது செயல்களைச் செய்யாதது என்பது
பொய்யாதது = பொய்யல்ல உண்மையாகும்

2
பொய்யானது செய்யும்அது செய்யாதது பெய்யாதது

உடம்பானது செய்கின்ற செயல்களை செய்யாமல் நிற்கும் ஆத்மா புலன் வழித் தன்னைப் பெய்யாதது    (வெளிச் செலுத்தாதது)

பொய்யானது = உடம்பானது
செய்யும்அது = செய்கின்ற செயல்களை
செய்யாதது = செய்யாமல் நிற்கும் ஆத்மா
பெய்யாதது = புலன் வழித் தன்னைப் பெய்யாதது
                                           (வெளிச் செலுத்தாதது)

3
மெய்யாலது மெய்யானது மெய்யானது பெய்யாதது

மெய்ப்பொருளாம் இறைவனால் உண்டானது ஆத்மா உடலினின்று பிறந்ததல்ல

மெய்யாலது =  மெய்ப்பொருளாம் இறைவனால்
மெய்யானது = உண்டானது
மெய்யானது = ஆத்மா
பெய்யாதது =   உடலினின்று பிறந்ததல்ல

4
 மெய்யானது செய்யாதது மெய்யானது பொய்யாதது

உண்மையை ( தேடலாகிய செயலை) செய்ய முடியாமல் மீண்டும் உடம்பாக தோன்றுகின்ற ஜீவாத்மா இறைவனுடைய அம்சம் (பரமாத்மா வினின்று தோன்றியது ) என்பது பொய் இல்லாத உண்மையாகும்.

மெய்யானது = உண்மையை
செய்யாதது = ( தேடலாகிய செயலை) செய்ய முடியாமல்
மெய்யானது = மீண்டும் உடம்பாக தோன்றுகின்ற ஜீவாத்மா
பொய்யாதது = இறைவனுடைய அம்சம்
                                              (பரமாத்மா வினின்று தோன்றியது )
                                              என்பது பொய் இல்லாத உண்மையாகும்


மனித - யோக சம்வாதம்
(சாதாரண மனிதனுக்கும் யோகத்துக்கும் நடக்கும் தர்க்கம்)


மயக்கத்தின் கேள்வி


புயலில்பட்ட வயலெனவே சாய்ந்துமனம் ஓயுது
கயலின்சுட்டித் துடிப்புடனே பிறகுஅதுவும் இயங்குது
கயிறில்இறுகும் உயிரெனவே திணறல்கூட கொள்ளுது
புலரும்காலைத்  தாமரையாய் சிலசமயம் சிரிக்குது
வளரும்துன்ப  நினைவதாலே  இருண்டுமுகமும் மங்குது  
அலர்ந்தகாலை சூரியன்போல் சிலசமயம் ஒளிருது
துயிலும்கொண்ட செயலுமாக மாறிமாறி விளங்குது
முடிவில்லாத ஓட்டத்தாலே தள்ளாட்டம்தான் கொள்ளுது

வினயில்வந்த விளைவதுவும் வினையைத்தூண்டி நிற்குதே
சினைந்துமுதிர்ந்த முட்டையாக ஆயிரமாய்ப் பெருகுதே
நிணமாய்த்தோன்றி நாடிகொண்டு அலையும்உடலும் கூடவே
பிணமாய்க்குன்றி ஓடிஓய்ந்து அமைதிஓர்நாள் கொள்ளுதே  
கணத்தில்தோன்றும் எண்ணம்நூறில் மனதுமட்டும் அலையுதே
வனத்தில்சென்று தவம்புரிந்தும் நிலையில்நிற்க மறுக்குதே
எனவேநானும் தினமும்கதறி தவித்திருக்க லாகுதே
எனினும்கடவுள் ஒருநாள்வந்து உதவிடாதி ருப்பதேன்?
இதமாய் ரெண்டு வார்த்தையேனும் சொல்லிடாக்கல் நெஞ்சமேன்

குணத்தில்நூறு அன்னையாக இறைவன்கருணை என்பது
பணத்திலூறும் கஞ்சன்கொண்ட தாராளம்போல் தோணுது  
அன்புத்தாயின் அணைக்கும்கருணை கண்டஎந்தன் நெஞ்சது
மறைந்துறையும்  இறையைவேறு எப்படித்தான் நினைப்பது அவனைக்கருணை தாயாய்ஏற்க  மறுக்கத்தானே செய்யுது
நானாஅவனைத்  தேடினேன் படைக்கச்சொல்லி வேண்டினேன்
தானாயவனு மிருந்திராமல் விளையாட்டாகச்செய்ததில்
வீணாயிங்கு போனதன்றி எந்தன்தவறு என்னது ?




தயக்கத்தின் தோல்வி
(பதிலறியா நான் தோல்வி ஏற்கத் தயங்கி பதஞ்சலியை நாடுதல்)

மேலேசொல்லி தெரிவதெல்லாம் மனிதன்குற்றச் சாட்டது 
தாளிடாத மடையில்நீர்போல் வேகமாக வருகுது 
வாளிலவன் பட்டதுபோல்  துன்பம்காணும் நெஞ்சது  
 காலில்வெந்நீர் சுட்டதுபோல் துடித்துத்தானே போகுது  
நூலில்கண்டு எழுதிடாத இறைவனதந்த சாத்திரம்
வேலில்கண்ட கூரதான பதஞ்சலியார் சூத்திரம்
நாலில்பட்ட திசைகளாக வழிகொடுக்கு  மத்திறம்    
வானில்பட்ட நிலவதாக விளங்கும்பொறுத்தால் மாத்திரம்..!




யோகத்தின் உதவி


இறந்துமீண்டும் பிறந்துநானும் செயல்புரிந்து உழல்வது
இரந்துநானும் கொண்டதன்று இறைவன்செய்த தென்பது
புரிந்ததாக எண்ணுமுந்தன் குற்றச்சாட்டாய் அமையுது   
விரிந்ததாக  அறிவுகொண்டு கூர்ந்துநீயும் நோக்கிடு
தெரிந்ததாக நீயும்சொன்னக் குற்றச்சாட்டின் தீர்வது 
மறைந்ததாக உறைந்திருக்கு குற்றச்சாட்டின் உள்ளது
படைப்பதாக அவனும்கொண்டு  இடைவிடாது செய்வது
அகப்படாதுன் அறிவுக்கவன் விளையாட்டுமே தானது

பிறந்ததுநா னல்லஇறைவன் படைத்ததனா லென்கிறாய்  
புரிந்துநீபின்  பலனுமெனது என்றுமேஏன் கொள்கிறாய்
 படைத்தவனே  புரிவதிலே  பலனும்கொள்ள லாகவே
படைத்துநீயும் அர்ப்பணிக்க அமைதிகூடும் நெஞ்சிலே
இடையனாக வந்தகண்ணன் சொல்லிச்சென்ற தந்திரம்
படிப்பதாக நாமும்கொள்ளும் கீதைஎன்னும் மந்திரம் 
வடிப்பதுமே சாரமாகும் பயிலக்கொள்ள விரிந்துரும் 
துடிப்புடனே நாமும்கொள்ள அமைந்தயோகச் சூத்திரம்

அடிப்பதாக வந்ததுன்பம் காணாமல்தான் போகுதே
பிடிப்புடனே கீதைபாதை செல்லுகின்ற நெஞ்சிலே
துடிப்புடனே யோகம்கொண்டு சாதனையைச் செய்திடு
கடைப்பிடிக்கும் தியானம்கொண்டு சமாதியில்நீ  கூடிடு
கிடைத்திருக்கும் இறையின்காட்சி காலம்கருதிக் காத்திரு
படைத்திருக்கும் அன்னையாக இறையும்தோன்றும்  பார்த்திரு 
இடத்திருந்து காலம்கருத ஞாலமும்கை  கூடுது
அடியிரண்டு கொண்டதிருக் குறளுமிதைக் கூறுது


இரவுமுழுதும் இருட்டுகூட ஆட்சியும்தான் புரியுது
பிறகுவந்த    சூரியனால் கணத்தினிலே மறையுது
எதற்கும்கால  நேரமென்று இயற்கையிலே இருக்குது
இறைக்குமந்த நெறியுமுண்டு என்பதைநீ உணர்ந்திடு
கரைந்துமனம்  நிறைவுறவே தூய்மைகொண்டு நிரப்பிடு 
விரைந்துதினம் தொழும்வழியில் இறையின்மணம்  பரப்பிடு
பிறக்கும்ஞானம் சித்தத்திலே சுத்தசத்வ சோதியாய்
இருக்கும்வண்ணம் இணைத்திருக்கும்
அவனிலுன்னைஆதியாய்..!

-------------------------------------------------------


சிற்றறிவு இயன்றபணி முடித்தபிறகு காணுது
உற்றவிந்த மனிதப்பிறவி உத்தமமாய்த் தோணுது
கற்றதுமே கைய்யளவு மில்லைஎன்றே புரியுது
கல்லாதது உலகளவின் மேலேஎன்றும் தெரியுது
வற்றிடாத ஊற்றாயிங்கு இறைவனுறைந்து கிடப்பது
கூரிடாத ஒன்றாயங்கு ஆன்மமிருக்கும் நெஞ்சது
வேர்படாத நம்பிக்கையால் வெளியில் தேடலாவது
ஊரிடாத பாலையிலே நீரைத்தேடல் போலது
இதுவரையில் புரிபடாத பலதுமின்று தெரியுது
எதுவரையில் புரிந்திடணும் செயலுமென்று புரியுது
'அது'விரைவில் தெரியவேணும் 'எது'வும் என்றுஅறியுது
இதுவரையில் அறிந்திடாத அமைதிமனதில் கூடுது


இதுவரையில் தொடர்ந்தமுயற்சி  இனிதேயிங்கு  முடியுது
'அது' விரைவில் தேடும்பயிற்சி இனித்தானிங்கு தொடங்குது
எதுபுரிந்து படுகிறதோ அதுவுமீச னருளது
பழுதறிந்து  பார்த்திட்டாயின் இருண்டவென்னறி     விளைவது
தொழுதுஅழுது பிழையைப்போக்க ஈசன்பாதம் நாடுவேன்
பெரிதுஉந்தன் கருணைகொண்டு
எந்தன்பிழையைப் பொறுத்திடு 


------------------------------------------------------------------------------------------------

பதஞ்சலியார் பாதம் சரண்
 விலகவேண்டும் எந்தன் முரண்
வளரவேண்டும் யோகத்  திறன்  
விளங்கவேண்டும் ஈசன் கழல்


சுபம்
------------------------------------------------------------------------------------------------
<<< முதல் பக்கம் >>>

1 comment: