Friday, September 30, 2016

** யோகத்தில் தாகம் (கிருஷ்ண கர்ணாம்ருதம்)
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (4)
காசிராமசுரம் பத்ரிஅமரபுரம் என்றுசாமியைநான் தேடினேன்
அந்தசாமி-என் நெஞ்சிலான்மஒளி என்றிருப்பது-நான் காண்கிலேன்
கங்கைகாவிரியும் புனிதமாய்நதிகள் தேடியங்குநீ..ராடினேன்
பக்திநீர்வழிய அன்புத்தந்தைஉனை என்றுநெஞ்சகத்தில் நாடினேன்?

மாயமோகவலை ஆசைப்பாசப்புதை மண்ணில்கால்புதைக்க ஓடினேன்
ரோஷவேஷத்துடன் வந்தமூடமதி தந்தஆணவத்தி லாடினேன்
காயமாயமது உண்டுநான்எனது என்றுவாய்கிழியப் பேசினேன்
மாயும்போதுஅது வந்திடாதுதுணை என்றுநான்அறியக் கூசினேன்
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
சொந்தமாய்மனது வந்தநான்எனது என்றதன்னுணர்வு வாட்டுது
வந்தமாயமிது செல்லுமாபிறகு திறக்குமா மனதுபூட்டது ?
எந்தன்தாய்குழந்தை தந்தைஎன்மனைவி என்றஎண்ணமென்று போவது
இந்தமானுடத்தில் வந்தயாவருமென் சொந்தமென்றுஎன்றாவது ?

பந்தபாசங்களும் வந்தநேசங்களும் இந்தபூவுலகில் மாயுது
என்றஎண்ணமிது சென்றுமாய்ந்திடவே நல்லஞானம்உரு..வாகுது
எந்தஜென்மத்திலும் வந்தயாவருமென் சொந்தசோதரரே..யாவது
என்றஞானம்வர அன்புத்தந்தைஉன் அருளுக்காக மனம்-ஏங்குது
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

அன்புதெய்வம்என நன்குநான்எழுதி சொல்லினேன்எனது பாட்டிலே
அந்தஅன்புவர செய்யும்சேவைதனை விட்டுத்தூங்கினேன் வீட்டிலே
முன்புராமனுமாய் பின்புகண்ணனுமாய் வந்தஉன்அருமை உணர்ந்திலேன்
அன்புமுழுவதுமாய் மண்ணில்உன்வடிவைக் கண்டபின்னும்மனம் தெளிந்திலேன்

ஐயகோஎனக்கு நல்லபுத்திதரும் ஆன்மஜோதி என்றுஒளிர்வது
ஐயமோஉனக்கு எந்தன்-யோக்கியத்தில் என்றுஎன்றுநான் தெளிவது
உய்யவோர்வழியும் தோன்றிடாதுவினை வந்துவந்துஅலைக் கழிக்குது
பைய்யவாயிடினும் செய்யுவாய்அருளை எந்தன்பொறுப்புஇனி உன்னது
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

ஒன்று நான்கிரண்டு என்றுமூச்சுமே நன்குஆடி ஒளிகூடுமா
நன்கு-நான்தொழும் உந்தன்திருவடி எந்தன்-நெஞ்சில்தினம் ஆடுமா
என்றுஎன்மனத் தாடல்நிற்குமோ சென்றுசின்மயம் தேடுமோ?
நன்றுநன்றென வந்துஉன்னருள் என்றுஎன்மனதில் கூடுமோ

அந்த நாள்வரை துன்பப்பாசறை தன்னில்-வாழ்ந்திடுதல் வேண்டுமோ ?
வந்த நாள்முதல் இன்பம்என்றிதை எண்ணிச் சிறைபுகுந்த வாழ்வுமோ?
அந்த..கன்திரும்ப கொண்டுசெல்லுவதும் பின்னர்திரும்புவது மாகினேன்
சொந்தம் நீஎனது பந்தமாய்உலகு வந்துகாத்திடுகோ..விந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

ஆசை பக்தியையும் நல்ல-புத்தியையும் கெடுத்துக்குட்டிச் சுவராக்குது
ஆசைவந்துபே..ராசையாகிப்பின் வளர்ந்துநற் செயலைக் கெடுக்குது
ஆசைப்பாதையிலே வந்ததடைகளையே கோபம்விலகச்செய்யப் பாக்குது   
ஓசையின்றிஅது கொஞ்சநஞ்சமாய் வந்தஞானத்தையே நீக்குது

*காசுகாசென சேர்த்துக் காசினைக் காசுகொண்டுநான் பூசினேன்
**மூசுவண்டறைப் பொய்கை தண்மலர்ப் பாதம்காண-நா வரசிலேன்
நேசப் பாதையினை ராசலீலையென வாழ்ந்துகாட்டியகோ-விந்தனே
மாசுதூசென சென்றுபறந்திட  அருளைவீசு வசுநந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
மண்ணில் உன்பதங்கள் வந்துநர்த்தனமும் நூறுஅற்புதமும் செய்தது
கண்களதனைதினம் கண்டபோதும்-அகம் காரம்வந்ததனை மூடுது
அந்தகோவிந்தனை எண்ணுவாய்தினமும் என்றுசங்கரனும் சொன்னது
எண்ணிடாதுஉனைக் கேட்டிடாததனை செய்யுமென்வினையைக் கொன்றிடு
செய்தபாவங்களும் உலகமாயங்களும் வந்துவந்துபயம் காட்டுது
எந்தன்நெஞ்சம்தனில் அந்தபொன்தனமும் வந்துஆணவத்தைக் கூட்டுது
அந்தவேதங்களும் சொல்லும்தத்துவமும் எந்தன்அறிவில்எங்கு ஏறுது
உந்தன்பாதங்களை எந்தகாலத்திலும் நெஞ்சிலாடும்படி செய்திடு
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
எந்தன்மன்மனது தந்ததொந்தரவு நீக்குபோக்குகோ..விந்தனே
சொந்தமென்றுநிதம் வந்துவல்வினைகள் தருதுதருதுபாழ் சிந்தனை
சித்தம்நின்றுபதம் நன்குதண்ணொளியை வீசுவீசுமா றருளவே
எந்தனிடையும்சுழு முனையும்பிங்கலையும் ஒன்றுசேர்ந்து நடமாடுமே
என்றுஅந்தநிலை வந்துபிறவிஅலை சென்றுஓயும்கோ..விந்தனே
மென்றுமென்றுஎனை தின்றுதின்றுவினை கொன்றுகொன்றுவரும் மெல்லவே
நன்றுநன்றுஎனக் கண்டி..டாமலருள் வந்துதந்திடு கோ..விந்தனே
அன்றுஅன்றுவரை எங்கும்தாவிடுமென் நெஞ்சிலாடணுமுன் சிந்தனை
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
சாடுசாடுஅடி என்றுதிருமழிசை யாரும்சொன்னதிருப் பாதமே
காடுஆடுபொடி பூசிநின்றதரு கீழமர்ந்தகுரு மூர்த்தமே
கோடிகோடியுகம் கண்டபிரமனையும் தந்தநாபியுடை தந்தையே
மடுவிலாடுமொரு நாகமாடுமிரு பாதம்காட்டுகோ..விந்தனே


கண்டிடாதபடி விண்ணிலாடும்முடி தொட்டிடாதஅடி உன்னது
எண்ணிடாதபடி செய்தகர்மவினை பட்டுவாடும்மனம் என்னது
மட்டிலாதபடி அன்புகொண்டபடி உள்ளஉன்னடியை நாடினேன்
கண்ணிலாடும்படி எந்தன்ஆன்மஒளி காட்டுகாட்டுகோ..விந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
அன்புகொண்..டிடு உதவிசெய்..திடு துன்புறுத்தலைத் தள்ளிடு
என்றசொன்னது அன்புதந்தையின் வேதவாக்குமாய் ஆகுது
காலகாலமாய் மண்ணில்ஞானியர் தந்ததத்துவ ஞானமே
தூலரூபமாய் வந்தபிரமம்நீ சொன்ன வார்த்தையில் தோணுமே

எந்தன் பாடலில் வந்தகூவலைக் கேளுகேளுகோ..விந்தனே
சித்தம்ஆடுகின்ற வெற்றுஆட்டத்தைப் போக்கு-தேவகியின் பாலனே
எந்தன்ஊடலைப் போக்கவல்லதாய் உள்ளயா..வையினும் நல்லதே
உந்தன்கூடலால் எந்தன்ஊடலைப் போக்கிநிறுத்து என்தேடலை
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
எந்தன்தாய் மொழியாம் உந்தன்வாய்மொழியைச் சொல்லிச்சொல்லிநான் போற்றுவேன்
எந்தன்மாயவினை நின்றுஓயும்வரை உந்தன்திருவடியில் அரற்றுவேன்
இந்தலோகத்திலும் எந்தலோகத்திலும் உந்தன்திருமொழியே ஒலிக்குதே
அந்தஓம்ஒலியில் வந்தபொன்மொழியை எந்தன்சேய்மொழியில் பிதற்றுவேன்
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (3)

* பணப் பைத்தியமாய் செல்வம் சேர்த்துக் காசினை (குற்றங்களை) காசு கொண்டு (சேர்த்த செல்வத்தைக் கொண்டு) பூசி மறைக்க முயல்கிறேன்


**மூசுவண்டரையனைய உன் குளிர்ந்த மலர்ப்பாதங்களை உணரக் கூடிய பாக்யமும் ஞானமும் பெற்ற நாவுக்கரசன் அல்லேன் நான்.


FIRST PAGE


No comments:

Post a Comment