Showing posts with label Pathanjali Yoga. Show all posts
Showing posts with label Pathanjali Yoga. Show all posts

Thursday, November 10, 2011

பதஞ்சலி தனியன்

பதஞ்சலித் தனியன்கள்
எங்கேயந்த இறைவனென்று வந்தகேள்வி ஒண்ணாலே
இங்கேயென்று சொன்னான்கண்ண தாசனவன்பண்ணாலே
பாங்காய்நன்று விஸ்வநாதன் அமைத்தஇசையின் தன்னாலே
பாகாய்க்காதில் பாயும்சுந்தர் ராஜன்குரல் தேனாலே
வீணாய்ப்போகா துங்கள்நேரம் இதனைக்கேட்ப தனாலே

"பாசமுள்ள பார்வையுமே கடவுள் தானடா
கருணையுள்ள அந்தநெஞ்சும் கோயில் தானடா"
சொன்னதிங்கு நானுமில்லை வேறு யாரடா
இன்றும் நெஞ்சில் உறையும் கண்ண தாசனேயடா ..!






---------------------------------------------------------------------------

இறைக் காட்சி

பதஞ்சலி பணிந்துநீ
அமிழ்தினில் அமிழ்ந்துநீ
சுவைத்துநீ உளம்களி
மனம்தனில் படும்ஒளி


----------------

பதஞ்சலி பதம் பணிந்து
பயின்றிடு யோகம் நன்று
செய்திடு த்யானம் சென்று
எழுந்திடும் ஒளியும் ஒன்று
நின்றிடும் சஹஸ்ரக் குன்று
சென்றிடும் இருள கன்று
பெற்றிடும் அருளைக் கொண்டு
வென்றிடு எமனை இன்று

----------------

மோகத்தை விட்டெறிந்து
போகத்தை விட்டொழித்து
தாகத்தை பெற்றெழுந்து
யோகத்தில் பட்டிரு நீ
மேகத்தை சுட்டெரித்து
ஞாலத்தில் ஒளி கொடுக்கும்
சூரியன் போல் விளங்கு
பாரினில் பயன் கொடுத்து..!

----------------

சிக்கெனக் கொள்ளநெஞ்சின் உள்சென்று தேடல்விட்டு
திக்க்கெனத்தெரியாக் காட்டில் வெளியினில் சென்றுதேடும்
போக்கினை விட்டொழித்து வெளியுறு மன்மனத்தை
யோகத்தில் பட்டிழுத்து தாரணை தானும்கொண்டு
தொண்டுறு அவ்வைப்பாட்டி அகவலில் சொல்லிச்சென்ற
குண்டலி அசபைதன்னில் விண்டெழு மந்திரத்தால்
சென்றெலி வளையின்உள்ளே சுருண்டிரும் பாம்பேயன்ன
மூலத்தின் கீழ்சுருண்ட விசையினை நீஎழுப்பி
த்யானச்ச மாதிகொள்ள காலனும் சென்றுஓயும்
மோனத்தின் மூர்த்தியான ஈசனின் பதம்எழுமே

----------------

விண்ணகத்தைக் கடந்ததான சபையிலாடும் பொற்பதம்
கண்ணகத்தை நிறைப்பதான பிறையில்கூடு மேஇதம்
பெண்ணகத்தில் அரையதாக உடையதாகும் மெய்நிதம்
தன்னகத்தில் கொண்டநெஞ்சில் அமைதியாடு மேசதம்

--------------

கூழுக்கு உப்பழகு நுதல் விளங்கு நீறழகு
மலர்க்கழகு மணமிருக்கு வேழமுகமழகு கணபதிக்கு
பளிங்குவானில் நிலவழகு சிலிர்க்கும்வண்ணச் சிறகழகு
விலங்குநெஞ்சம் விலகப்பெறின் துலங்குசிவன் பேரழகு..!


--------------


ஆசைகொல்லஆசைகொண்டு சேவைநீயும் புரிந்திடு
பூசையென்று மற்றெதுவும் செய்திடாமல் போவது
*காசேயல்ல ஈசனருள் சேவையினால் கிட்டுது
வீசும்நல்ல தென்றலாக அமைதியும்தான் கூடுது

*காசேயல்ல = குற்றமல்ல



இறை மாட்சி

அருள்மழையால் அணையுமுந்தன் அகமெனும் கனல்சூடு
அதில்கரைந்து தரையுமாகும் நீயோர் மணல்மேடு


--------------

வந்ததுன்பம் மறைந்திடநீ கடவுள்தாளைப் பணிந்திடு
அந்ததுன்பம் மறைந்திடாயின் பொறுமைகொண்டு முயன்றிடு
நிற்கும்துன்பம் நீங்கிடாமல் நிற்கச் செய்ததாவது
உந்தன்திறனில் அவனும்கொண்ட நம்பிக்கையால் தானது

--------------

உலகமயக்கம் கொண்டநெஞ்சம் கடவுளிடம் செல்லுமே
கலங்கும்நெஞ்சம் மகிழ்வுறவே வேண்டுவன கேட்கவே
துலங்கும்நெஞ்சம் கேட்டிடாமல் சென்றடையும் தஞ்சமே
விளங்கும்பரமன் அருள்புரிவான் தேவைக்கினி பஞ்சமே

--------------

காலம்கடக்க உயர்ந்தமருந்தும் பயனில்லாமல் போகுது
சூலன்நினைக்க உயர்ந்தநெஞ்சின் கருமவினையும் சாகுது
பாலம்எனவே அமைந்தயோகம் பழகிநீயும் நின்றிடு
ஞாலம்படைக்கும் உமையின்பாகன் அருளைவேண்டி அழுதிடு
--------------

வளத்தநிலமும் வறுத்தவிதையை முளைத்திடவா செய்யுது
எலியின்வளையில் யானைபலத்தால் நுழைந்திடவா முடியுது
வினையின்விதையும் சூக்குமமாய் இருந்திருக்க லாயினும்
இமயமுறையும் ஈசனருளில் முளைத்திடாமல் செத்திடும்

--------------

எலியின்வளையில் நச்சுப்பாம்பு நலமாய்ச்சென்று வாழுது
புலியும்நரியின் குகையில்சென்று உல்லாசமாய்த் தூங்குது
வலிமையொன்றே இதற்குஅங்கு காரணமாய் அமையுது
எனினும்இறையின் அருளைப்பெற எளிமைபோது மானது

--------------

வறண்டநிலத்தில் முளைத்துவிதையும் செடியுமாகக் கூடுமோ
திரண்டவெண்ணை எழுந்துமீண்டும் பாலுக்குள்ளே செல்லுமோ
பொளிந்தகல்லில் காலம்கடந்து நிற்கும்உருவம் போன்றது
அளிந்தநெஞ்சின் யோகத்தாலே ஜோதிநின்று ஒளிர்வது

*அளி = அன்பு

--------------

ஈசன் வரும் வேளை .. வருகுதிங்கு நாளை ..!

ஸ்வாமிஸ்வாமி என்னுமபோது கண்ணில்நீரும் முட்டுதா ?
நம்மில்நம்மில் என்றுநீயும் அவனைஎண்ணச் சொல்லுதா ?
விம்மிவிம்மி அவனைஎண்ண அழுகையும்தான் பொங்குதா ?
பைத்தியம்நான் ஆகியதேன் என்றகேள்வி எழுகுதா ?
வைத்தியமும் தேவையில்லை மகிழ்ந்துநீயும் நில்லடா
சத்தியத்தின் அன்புத்தந்தை நெஞ்சில்வரும் நாளடா..!

--------------

ஈரமின்றி அன்பிலாது வரண்டிருக்கும் நெஞ்சாலே
ஈரம்கொண்டு குளித்துக்கூறும் மந்திரத்தின் பண்ணாலே
கோரும்வண்ணம் பூசைகொண்ட தீபதூப மொண்ணாலே
தீருமுந்தன் நெஞ்சம்கொண்ட ஆவல்என்று எண்ணாதே

இருந்தபொருளை இல்லாதவர் பயன்படவே தந்தாலே
வருந்துவோர்க்கு அன்புகொண்டு இரண்டுவார்த்தை சொன்னாலே
விரைந்தவனும் உடன்வருவான் நீஅழைக்கத் தன்னாலே
மகிழ்ந்திடுவான் பூசையில்நீ சூட்டும்பூவின் ஒண்ணாலே..!

துன்பமே இன்பம் - இன்பமே துன்பம்

நோயின்வேகத் தாலேஇனிப்பும் கசந்திடத்தான் செய்யுது
மனதிலமைதி குலையப்பஞ்சும் முள்ளாய்த்தானே குத்துது
இறையின்அணுக்கம் உலகஇன்பம் துன்பமாயத்தான் தெரியுது
மறைந்துபன்மை ஒருமையாக இன்பமலை மோதுது


--------------

உலகஇன்பம் முதலில்என்றும் இன்பத்தையே கொடுக்குது
பழகப்பாலும் புளிப்பதுபோல் இன்பம்சலித்துப் போகுது
பிழியும்துன்பம் கழியநெஞ்சும் இறையினிலே இருக்குது
அழகுக்கண்ணன் கோவிந்தனைக் குந்திவேண்டிக் கேட்டது
இன்பமல்ல துன்பம்தனை இதனாலேயே தானது

--------------

விலக்குமுணவை உண்டவயிறு உப்புசத்தில் வீங்குது
இலவிலான பஞ்சணையும் முள்ளைப்போலக் குத்துது
உருளுமம்மிக் குழவிபோல உடலும்புரண்டு தவிக்குது
உருண்டதுன்பம் புரண்டஉடலில் உணவைச்செரிக்கச் செய்யுது
புரிந்தசெயலின் விளவுதீர்க்க துன்பமிங்கே உதவுது
இருண்டமனதும் துன்பம்கொண்டு ஒளியைப்பெற்றுத் தெளியுது
திரண்டஇன்பம் கடைசியிலே கொண்டுவந்து சேர்க்குது

--------------

அன்னம் பிரம்மா - உடலே கோயில்

ஆன்மமுந்தன் உடலுமான சேற்றில்உறையும் தாமரை
அதற்குமந்த உடலுமாகும் சோற்றில்வளர்ந்த தோர்உறை
என்றிடாது அதனைதெய்வக் கோயிலாக நீநினை
மறந்திடாது வந்துமாவான் இறைவனுமே உன்துணை

--------------

இரையினாலே கனத்தவயிறால் உயிரும்போக நேருது
இரையில்கவனம் இல்லாதிருக்க இறையின்நினைப்பு வீணதே
இரையில்இறையை மறந்ததாக தோணும்மனித குணமது
இரையில்இறையை மறைந்ததாகக் காணும்யோகி மனமது

--------------

வாழும்வீட்டைக் கல்லாய்மண்ணாய் பார்ப்பதில்லை போலவே
வீழுமுடலை எலும்பாய்ச்சதையாய் போகம்கொள்ளும் கருவியாய்ப்
சேர்த்துராமல் வலம்புரியான் த்ந்தைவாழும் கோயிலாய்
பார்த்திருக்கும் நெஞ்சிலென்றும் அமைதித்தென்றல் வீசுமே..!

வைராக்கியம்

எதிர்க்குமெந்தப் பொருளும்திடத்தின் வைரத்தினா லாகியும்
விதிர்த்துநிற்க வைக்கும்யோகி கொண்டநல்வை ராக்கியம்
துதிக்கவைக்கும் யமனைக்கூட மதிக்கவைக்கும் உயர்வையும்
அதுகொடுக்கும் வகையிலாகும் என்னேசித்தன் பாக்கியம்..!

ஆறறிவு

இச்சைப்பட்டு பெற்றசோறு காகம்பகிர்ந்து உண்ணுது
எச்சைபட்ட கையால்ஓட்ட மனிதமனம் மறுக்குது
பிச்சைகொள்ளும் செல்வனாக ஆறறிவு விளங்குது
நற்செயலில் ஆறுமிங்கு ஐந்தின்முன்னே குறையுது..!

--------------


மயிலின்தோகை ஆட்டம்கண்டு கானகமே மகிழுது
குயிலதிடும் முட்டையுமே காகமடை காக்குது
வெய்யில்பட்ட உயிர்களுக்கு மரம்குடையாய் நிற்குது
நாயும்கொண்ட நன்றியாலே நல்லபெயர் வாங்குது

நாலுந்தெரிந்த மனிதநெஞ்சம் தன்னலமே தேடுது
வயமிழந்த ஆறின்மாட்சி ஐந்தினாலே அழியுது*
எமன்பிடுங்கும் உயிர்தனையே நிரந்தரமாய் எண்ணுது
திறம்படைத்த ஆறுமிங்கு ஐந்தின்முன்னே குறையுது**

** ஆறு = ஆறாவது அறிவு , ஐந்து = ஐம்புலன்

** ஆறுமிங்கு ஐந்தின் முன்னே குறையுது = ஆறறிவு கொண்ட மனிதன் ஐந்தறிவின் முன் குறை உற்றதாகிறான்


--------------

நடந்ததை மறந்திருப்போம் 
நடப்பதை நினைத்திருப்போம்
கிடைத்ததை கொடுத்திருப்போம் 
கிடைப்பதில் மகிழ்ந்திருப்போம்
படைத்ததை கொடுத்திருக்கும்
விடத்துடை ஈசன்பாதம்
கிடைத்திட நெஞ்சில்துய்யும் 
அழுக்கினைத் துடைத்தெடுப்போம்

அன்பே சிவன்
நல் லறிவேஅவன்
யாண்டும் இதை
நெஞ்சில் மறவாதவன்
மீண்டும் இனி
மண்ணில் பிறவாதவன்

----------------------------------------------------------------------------








Sunday, November 6, 2011

ஒளி மயம்






யோக நெறிப்படி ஜீவாத்மாவாகிய பெண் பரமாத்வாகிய புருஷனை அடைதலே முக்தி.
அவ்வாறு இறை அநுபூதி பெற்ற ஒரு ஜீவாத்மாவின் முக்தி கல்யாண ஊர்வலம்.

ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது 
த்யானத்தில் இறைஒளித் தோற்றம் எழுந்து நம்பிக்கை அளித்தல்.

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது 
உலகமெங்கும் நிறைந்திருக்கும் ஓமெனும் பிரணவ நாதம் சாதனையில் முதிர்ந்த சாதகனின் காதில் ஒலிக்கிறது 

நால் வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்
அந்த நாயகன் தானும் வானில் இருந்தே பூ மழை பொழிகின்றான்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள் 
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார் 

இறை அநுபூதி பெற்ற சாதகன். கடை நிலையில் முதிர்ச்சி பெற்ற ஜீவாத்மாக்கள் உறையும் உலகில் (நால் வகைப் பட்ட மதத்தினரும் அங்கு தான் கடைசியில் இருப்பர்) வாழ்ந்துப் பின் உரிய காலத்தில் இறை சேரச் செல்கிறான். அத்தருணத்தில் மற்ற ஆன்மாக்கள் அதைக் கோலாகலமாகக் கொண்டாடுவர். 
40 கோடி தேவர்களும்  = 33 வகைப் பட்ட தேவர்களும் + சப்த ரிஷி களும் (சமஸ்க்ருதத்தில் கோடி என்றால் வகை என்று பொருள் ), 
தேவர் தலைவன் இந்திரனும் வானில் இருந்தே பூ மழை பொழிகின்றான்
ஏன், இறைவனே பூமழை பொழிந்து கைவல்யத்துக்கு அழைத்துச் செல்கின்றான்.


40 கோடி = 33 வகையில் பட்ட தேவர்களும் + சப்த ரிஷி களும் (சமஸ்க்ருதத்தில் கோடி என்றால் வகை என்று பொருள் )
கலை மகள் : யோகக் கலையில் இடை பிங்கலை வென்றவர் .

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக 
குங்குமச்சிலை = இறை அனுபூதியில் பழுத்துச் சிவந்து திரண்ட ஜோதி.

எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்களச்செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக 
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

குலமகள், காவல் தெய்வம் கண்ணகி = இறை அனு பூதி அடைந்த சாதகனின் தலை முறை இறை உணர்வில் உந்தப்பட்டு முக்தி ஆசைப் பெறுகிறது.

சாதகன் தடுத்தாட்கொள்ளும் கடவுள் நிலைக்கு உயர்ந்து வீட்டை மணம் பெறச் செய்கின்றான்
விதேக முக்த நிலையில் சாதகனின் ஞானத்தால் நாட்டில் பக்தி மணம் கமழ்ந்து வளர்ச்சி அடைகிறது.

அங்கயர்க் கண்ணி = 
அனுபூதியினாலே ஜோதி மயமான உடல் முழுதும், உணரும் ஞானக் கண்ணாய்ப் மாறுகிறது

Saturday, November 5, 2011

முடிவல்ல தொடக்கம்


மெய் கொண்டு மெய் தேடு
பொய்யான உடல் , புலன், மனம் மீது ஆளுகை கொண்டு மெய்யான இறைவனைத் தேடுதல் யோகம் ஆகும்

மெய்யானது பொய்யானது மெய்யாது மெய்யானது 
மெய்யானது செய்யும்அது மெய்யானது செய்யாதது 
செய்யாதது செய்யாதது மெய்யானது மெய்யானது
பொய்யாதது பெய்யாதது பெய்யாதது பொய்யாதது

உடம்பானது நிலைத்திருக்கும் உண்மையானதல்ல. உடல்கொண்ட சேர்க்கையினால் அது உடலாக உண்டானது.
சத்யஸ்வரூபமான இறைவன் படைக்கும் அந்த உடல்/ஜீவன் ,   (மனதின் அறியாமையால புலன் மயக்கத்தால்)  உண்மையான நற்செயல்களை செய்யாமல் இருக்கின்றது.
செய்யலாகாததை (செயலை) செய்யாமல் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே உண்மையாக விளங்கி இருந்து  ( சத்யமான இறையைத் தேடி அறிய உதவிப் பின் ) ஜீவாத்மா பரமாத்மாவாக ஆகச் செய்து விளங்குகின்றது.
சத்யமான அந்த ஆத்மா ( புலன் வழியே தன்னைச்) செலுத்தாது. இதுவரை பெய்யாத அருள் மழை (மெய் ஞானம் பெற்று ஆன்மமே உண்மை என்று அறியுங்கால் ) பொய்க்காமல் பெய்கின்றது.

1
மெய்யானது பொய்யானது மெய்யாது மெய்யானது 

உடம்பானது நிலைத்திருக்கும் உண்மையானதல்ல. உடல்கொண்ட சேர்க்கையினால் அது உடலாக உண்டானது.

மெய்யானது   =      உடம்பானது 
பொய்யானது =      நிலைத்திருக்கும் உண்மையானதல்ல 
மெய்யாலது     மெய்யால் + அது
                                                 உடல்கொண்ட சேர்க்கையினால் அது 
மெய்யானது   =      உடலாக உண்டானது 
  
2
மெய்யானது செய்யும்அது மெய்யானது செய்யாதது 

சத்யஸ்வரூபமான இறைவன் படைக்கும் அந்த உடல்/ஜீவன் , (மனதின் அறியாமையால புலன் மயக்கத்தால்) உண்மையான நற்செயல்களை செய்யாமல் இருக்கின்றது
மெய்யானது  =       சத்யஸ்வரூபமான இறைவன் 
செய்யும்         =         படைக்கும்
அது                 =         அந்த உடல்/ஜீவன்
மெய்யானது  =         உண்மையான நற்செயல்களை
                                                      (மனதின் அறியாமையால புலன் மயக்கத்தால்)
செய்யாதது    =         செய்யாமல் இருக்கின்றது
3
செய்யாதது செய்யாதது மெய்யானது மெய்யானது
செய்யலாகாததை (செயலை) செய்யாமல் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே உண்மையாக விளங்கி இருந்து  ( சத்யமான இறையைத் தேடி அறிய உதவிப் பின் ) ஜீவாத்மா பரமாத்மாவாக ஆகச் செய்து விளங்குகின்றது.

செய்யாதது    =      செய்யலாகாததை (செயலை)
செய்யாதது    =      செய்யாமல் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே 
மெய்யானது  =      உண்மையாக விளங்கி இருந்து 
மெய்யானது  =     ( சத்யமான இறையைத் தேடி அறிய உதவிப் பின் )
                                      ஜீவாத்மா பரமாத்மாவாக ஆகச் செய்து விளங்குகின்றது.


4
பொய்யாதது பெய்யாதது பெய்யாதது பொய்யாதது
சத்யமான அந்த ஆத்மா ( புலன் வழியே தன்னைச்) செலுத்தாது. இதுவரை பெய்யாத அருள் மழை (ஞானத்தை உணர்ந்து ஆன்மமே உண்மை என்று அறியுங்கால் ) பொய்க்காமல் பெய்கின்றது.
பொய்யாதது =      சத்யமான அந்த ஆத்மா 
பெய்யாதது    =       ( புலன் வழியே தன்னைச்) செலுத்தாது 
பெய்யாதது    =      இதுவரை பெய்யாத அருள் மழை 
                                       (மெய் ஞானம் பெற்று ஆன்மமே உண்மை என்று
                                         அறியுங்கால் )
பொய்யாதது =     பொய்க்காமல் பெய்கின்றது 

-------------------------------------------------------

மேல் சொன்ன பாடலின் வார்த்தைகளை வேறு வரிசையில் (கீழ்கண்டவாறு ) அமைத்து எழுதப் பட்ட பாடல்.
Line 1 - Word 1,5,9,13 (Column 1) 
Line 2 - Word 2,6,10,14 (Column 2)
Line 3 - Word 3,7,11,15 (Column 3)
Line 4 - Word 4,8,12,16 (Column 4)

மெய்யானது மெய்யானது செய்யாதது பொய்யாதது
பொய்யானது செய்யும்அது செய்யாதது பெய்யாதது
மெய்யாலது மெய்யானது மெய்யானது பெய்யாதது
மெய்யானது செய்யாதது மெய்யானது பொய்யாதது

உண்மையான பரமாத்மா உடம்பிலுறையும் ஆத்மாவாக ஆனது. அது செயல்களைச் செய்யாதது என்பது பொய்யல்ல உண்மையாகும்.

உடம்பானது செய்கின்ற செயல்களை செய்யாமல் நிற்கும் ஆத்மா புலன் வழித் தன்னைப் பெய்யாதது    (வெளிச் செலுத்தாதது).

மெய்ப்பொருளாம் இறைவனால் உண்டான ஆத்மா உடலினின்று பிறந்ததல்ல.

உண்மையை ( தேடலாகிய செயலை) செய்ய முடியாமல் மீண்டும் உடம்பாக தோன்றுகின்ற ஜீவாத்மா இறைவனுடைய அம்சம் (பரமாத்மா வினின்று தோன்றியது ) என்பது பொய் இல்லாத உண்மையாகும்.

1
மெய்யானது மெய்யானது செய்யாதது பொய்யாதது

உண்மையானபரமாத்மா உடம்பிலுறையும் ஆத்மாவாக ஆனது. அது செயல்களைச் செய்யாதது என்பது பொய்யல்ல உண்மையாகும்.

மெய்யானது = உண்மையானபரமாத்மா
மெய்யானது = உடம்பிலுறையும் ஆத்மாவாக ஆனது
செய்யாதது = அது செயல்களைச் செய்யாதது என்பது
பொய்யாதது = பொய்யல்ல உண்மையாகும்

2
பொய்யானது செய்யும்அது செய்யாதது பெய்யாதது

உடம்பானது செய்கின்ற செயல்களை செய்யாமல் நிற்கும் ஆத்மா புலன் வழித் தன்னைப் பெய்யாதது    (வெளிச் செலுத்தாதது)

பொய்யானது = உடம்பானது
செய்யும்அது = செய்கின்ற செயல்களை
செய்யாதது = செய்யாமல் நிற்கும் ஆத்மா
பெய்யாதது = புலன் வழித் தன்னைப் பெய்யாதது
                                           (வெளிச் செலுத்தாதது)

3
மெய்யாலது மெய்யானது மெய்யானது பெய்யாதது

மெய்ப்பொருளாம் இறைவனால் உண்டானது ஆத்மா உடலினின்று பிறந்ததல்ல

மெய்யாலது =  மெய்ப்பொருளாம் இறைவனால்
மெய்யானது = உண்டானது
மெய்யானது = ஆத்மா
பெய்யாதது =   உடலினின்று பிறந்ததல்ல

4
 மெய்யானது செய்யாதது மெய்யானது பொய்யாதது

உண்மையை ( தேடலாகிய செயலை) செய்ய முடியாமல் மீண்டும் உடம்பாக தோன்றுகின்ற ஜீவாத்மா இறைவனுடைய அம்சம் (பரமாத்மா வினின்று தோன்றியது ) என்பது பொய் இல்லாத உண்மையாகும்.

மெய்யானது = உண்மையை
செய்யாதது = ( தேடலாகிய செயலை) செய்ய முடியாமல்
மெய்யானது = மீண்டும் உடம்பாக தோன்றுகின்ற ஜீவாத்மா
பொய்யாதது = இறைவனுடைய அம்சம்
                                              (பரமாத்மா வினின்று தோன்றியது )
                                              என்பது பொய் இல்லாத உண்மையாகும்


மனித - யோக சம்வாதம்
(சாதாரண மனிதனுக்கும் யோகத்துக்கும் நடக்கும் தர்க்கம்)


மயக்கத்தின் கேள்வி


புயலில்பட்ட வயலெனவே சாய்ந்துமனம் ஓயுது
கயலின்சுட்டித் துடிப்புடனே பிறகுஅதுவும் இயங்குது
கயிறில்இறுகும் உயிரெனவே திணறல்கூட கொள்ளுது
புலரும்காலைத்  தாமரையாய் சிலசமயம் சிரிக்குது
வளரும்துன்ப  நினைவதாலே  இருண்டுமுகமும் மங்குது  
அலர்ந்தகாலை சூரியன்போல் சிலசமயம் ஒளிருது
துயிலும்கொண்ட செயலுமாக மாறிமாறி விளங்குது
முடிவில்லாத ஓட்டத்தாலே தள்ளாட்டம்தான் கொள்ளுது

வினயில்வந்த விளைவதுவும் வினையைத்தூண்டி நிற்குதே
சினைந்துமுதிர்ந்த முட்டையாக ஆயிரமாய்ப் பெருகுதே
நிணமாய்த்தோன்றி நாடிகொண்டு அலையும்உடலும் கூடவே
பிணமாய்க்குன்றி ஓடிஓய்ந்து அமைதிஓர்நாள் கொள்ளுதே  
கணத்தில்தோன்றும் எண்ணம்நூறில் மனதுமட்டும் அலையுதே
வனத்தில்சென்று தவம்புரிந்தும் நிலையில்நிற்க மறுக்குதே
எனவேநானும் தினமும்கதறி தவித்திருக்க லாகுதே
எனினும்கடவுள் ஒருநாள்வந்து உதவிடாதி ருப்பதேன்?
இதமாய் ரெண்டு வார்த்தையேனும் சொல்லிடாக்கல் நெஞ்சமேன்

குணத்தில்நூறு அன்னையாக இறைவன்கருணை என்பது
பணத்திலூறும் கஞ்சன்கொண்ட தாராளம்போல் தோணுது  
அன்புத்தாயின் அணைக்கும்கருணை கண்டஎந்தன் நெஞ்சது
மறைந்துறையும்  இறையைவேறு எப்படித்தான் நினைப்பது அவனைக்கருணை தாயாய்ஏற்க  மறுக்கத்தானே செய்யுது
நானாஅவனைத்  தேடினேன் படைக்கச்சொல்லி வேண்டினேன்
தானாயவனு மிருந்திராமல் விளையாட்டாகச்செய்ததில்
வீணாயிங்கு போனதன்றி எந்தன்தவறு என்னது ?




தயக்கத்தின் தோல்வி
(பதிலறியா நான் தோல்வி ஏற்கத் தயங்கி பதஞ்சலியை நாடுதல்)

மேலேசொல்லி தெரிவதெல்லாம் மனிதன்குற்றச் சாட்டது 
தாளிடாத மடையில்நீர்போல் வேகமாக வருகுது 
வாளிலவன் பட்டதுபோல்  துன்பம்காணும் நெஞ்சது  
 காலில்வெந்நீர் சுட்டதுபோல் துடித்துத்தானே போகுது  
நூலில்கண்டு எழுதிடாத இறைவனதந்த சாத்திரம்
வேலில்கண்ட கூரதான பதஞ்சலியார் சூத்திரம்
நாலில்பட்ட திசைகளாக வழிகொடுக்கு  மத்திறம்    
வானில்பட்ட நிலவதாக விளங்கும்பொறுத்தால் மாத்திரம்..!




யோகத்தின் உதவி


இறந்துமீண்டும் பிறந்துநானும் செயல்புரிந்து உழல்வது
இரந்துநானும் கொண்டதன்று இறைவன்செய்த தென்பது
புரிந்ததாக எண்ணுமுந்தன் குற்றச்சாட்டாய் அமையுது   
விரிந்ததாக  அறிவுகொண்டு கூர்ந்துநீயும் நோக்கிடு
தெரிந்ததாக நீயும்சொன்னக் குற்றச்சாட்டின் தீர்வது 
மறைந்ததாக உறைந்திருக்கு குற்றச்சாட்டின் உள்ளது
படைப்பதாக அவனும்கொண்டு  இடைவிடாது செய்வது
அகப்படாதுன் அறிவுக்கவன் விளையாட்டுமே தானது

பிறந்ததுநா னல்லஇறைவன் படைத்ததனா லென்கிறாய்  
புரிந்துநீபின்  பலனுமெனது என்றுமேஏன் கொள்கிறாய்
 படைத்தவனே  புரிவதிலே  பலனும்கொள்ள லாகவே
படைத்துநீயும் அர்ப்பணிக்க அமைதிகூடும் நெஞ்சிலே
இடையனாக வந்தகண்ணன் சொல்லிச்சென்ற தந்திரம்
படிப்பதாக நாமும்கொள்ளும் கீதைஎன்னும் மந்திரம் 
வடிப்பதுமே சாரமாகும் பயிலக்கொள்ள விரிந்துரும் 
துடிப்புடனே நாமும்கொள்ள அமைந்தயோகச் சூத்திரம்

அடிப்பதாக வந்ததுன்பம் காணாமல்தான் போகுதே
பிடிப்புடனே கீதைபாதை செல்லுகின்ற நெஞ்சிலே
துடிப்புடனே யோகம்கொண்டு சாதனையைச் செய்திடு
கடைப்பிடிக்கும் தியானம்கொண்டு சமாதியில்நீ  கூடிடு
கிடைத்திருக்கும் இறையின்காட்சி காலம்கருதிக் காத்திரு
படைத்திருக்கும் அன்னையாக இறையும்தோன்றும்  பார்த்திரு 
இடத்திருந்து காலம்கருத ஞாலமும்கை  கூடுது
அடியிரண்டு கொண்டதிருக் குறளுமிதைக் கூறுது


இரவுமுழுதும் இருட்டுகூட ஆட்சியும்தான் புரியுது
பிறகுவந்த    சூரியனால் கணத்தினிலே மறையுது
எதற்கும்கால  நேரமென்று இயற்கையிலே இருக்குது
இறைக்குமந்த நெறியுமுண்டு என்பதைநீ உணர்ந்திடு
கரைந்துமனம்  நிறைவுறவே தூய்மைகொண்டு நிரப்பிடு 
விரைந்துதினம் தொழும்வழியில் இறையின்மணம்  பரப்பிடு
பிறக்கும்ஞானம் சித்தத்திலே சுத்தசத்வ சோதியாய்
இருக்கும்வண்ணம் இணைத்திருக்கும்
அவனிலுன்னைஆதியாய்..!

-------------------------------------------------------


சிற்றறிவு இயன்றபணி முடித்தபிறகு காணுது
உற்றவிந்த மனிதப்பிறவி உத்தமமாய்த் தோணுது
கற்றதுமே கைய்யளவு மில்லைஎன்றே புரியுது
கல்லாதது உலகளவின் மேலேஎன்றும் தெரியுது
வற்றிடாத ஊற்றாயிங்கு இறைவனுறைந்து கிடப்பது
கூரிடாத ஒன்றாயங்கு ஆன்மமிருக்கும் நெஞ்சது
வேர்படாத நம்பிக்கையால் வெளியில் தேடலாவது
ஊரிடாத பாலையிலே நீரைத்தேடல் போலது
இதுவரையில் புரிபடாத பலதுமின்று தெரியுது
எதுவரையில் புரிந்திடணும் செயலுமென்று புரியுது
'அது'விரைவில் தெரியவேணும் 'எது'வும் என்றுஅறியுது
இதுவரையில் அறிந்திடாத அமைதிமனதில் கூடுது


இதுவரையில் தொடர்ந்தமுயற்சி  இனிதேயிங்கு  முடியுது
'அது' விரைவில் தேடும்பயிற்சி இனித்தானிங்கு தொடங்குது
எதுபுரிந்து படுகிறதோ அதுவுமீச னருளது
பழுதறிந்து  பார்த்திட்டாயின் இருண்டவென்னறி     விளைவது
தொழுதுஅழுது பிழையைப்போக்க ஈசன்பாதம் நாடுவேன்
பெரிதுஉந்தன் கருணைகொண்டு
எந்தன்பிழையைப் பொறுத்திடு 


------------------------------------------------------------------------------------------------

பதஞ்சலியார் பாதம் சரண்
 விலகவேண்டும் எந்தன் முரண்
வளரவேண்டும் யோகத்  திறன்  
விளங்கவேண்டும் ஈசன் கழல்


சுபம்
------------------------------------------------------------------------------------------------
<<< முதல் பக்கம் >>>

Tuesday, August 16, 2011

பதஞ்சலி யோக சூத்ரம்**





முன்னுரை - என்னுரை

யோகத்துக்கு தமிழில் பொருள் செய்வதோ , பாடலாக வடிக்க வேண்டும் என்பதோ இந்த முயற்சியின் நோக்கமன்று.

காலத்தில் அழியாத யோகத்தை ஏதோ ஒரு கால கட்டத்தில் (வேறு பிறவியில் கூட)  மேற்கொண்டு இறையுடன் கலப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

இதன் காரணமாக பதஞ்சலி யோக சாஸ்திரத்தை  ஊன்றிப் படிக்கலானேன். அப்போது எடுக்கும் குறிப்புகளாக (நோட்ஸ்) இதை எழுதுகிறேன். இந்தக் குறிப்பு யோகம் செய்ய முனயுங்கால் (முனைந்தால் !) எனக்குப் பயனுறும் என்று கருதுகிறேன்.

இதற்குப் பல புத்தகங்கள் படித்தும் குறிப்பாக கீழ்க்கண்ட தமிழ்ப் புத்தகம் பெரிதும்  துணை புரிந்தது.

பதஞ்சலி    விளக்க உரை : சுவாமி சச்சிதானந்தா.
 வானதி பதிப்பகம். தி நகர். 
கீழ்க்கண்ட இணையப் பக்கம் சமஸ்க்ருத வார்த்தைகளின் பொருள் அறிய உதவிற்று.
Thanks to :
The english translation quoted in this work has been culled out from this site.  http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/

இந்த உந்துதலை எனக்களித்து என்நினைவில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தந்தைக்கு இதை அர்ப்பணிக்கிறேன்.

I miss you Dad..!
I wish I had you by my side to guide me..!
I hope you are ... !
   ஸ்ரீதரன்..!
---------





பத்தரின் சித்தத்தின் ஐயம்களை அறிவோ 
சித்தரின் வித்தையை அறிந்தெழுமத் திறமோ
பெற்றிலன் ஆயினும் தமிழினில் பரம 
வித்தராம் பதஞ்சலி யோகத்தின் சிரம 
சூத்திரம் யாவையும் இனித்திடத் தரவே
முந்தினேன் வித்தவி நாயகத் தருவே
வந்துனை வேண்டினேன் மெய்ப்பொருள் அறிவே
சிந்தனை விட்டுநீ எனக்கருள் குருவே ..!
----------


சுழுமுனையா லெழுவிசையால் விழுமனதை ஏற்றிப்பாழும்
கழுமதியா லெழுபிணியால் விழுமுடலைத் தேற்றிஊழின்
பழிசாரா பதஞ்சலியார் யோகதீப மேற்றிவாழும்
வழிவகையான் தொழும்செயலால் ஈசனைநீ போற்று போற்று ..!
----------

தொற்றிநாம் பின்னேசென்று தேடிடத் தகுந்த ஒன்று
காற்றிலே படர்ந்துசென்று இதம்தரும் மணமதன்று
கூற்றிலே கலந்துநின்று குளிர்தரும் வாக்குமன்று 

சேற்றிலே மலர்ந்திருந்து எழில்தரும் மலருமன்று
பற்றிலே சேர்ந்திருக்கும் உடல்பெறும் சுகமுமன்று 
சோற்றினை அரைத்தரைத்து நாவுறும் சுவையுமன்று 
பிறிதொரு உருவமற்று நிறைஉறு பரமன்என்று
புகன்றிடும் யோகமின்று பதஞ்சலி கூற்றில் நன்று
பயின்றிட தீபமொன்று சுடர்விடும் சஹஸ்ரத் தின்று .. !

-----------

பதஞ்சலி யோக சூத்ரங்கள் கீழ்க்கண்ட நான்கு பாதங்கள் அதாவது பாகங்களாகப் பகுத்துத் தரப்பட்டுள்ளன 
1.சமாதி பாதம் : மனது பூரண அமைதிப்படும் நிலை  சமாதி எனப்படும். அந்த பூரண அமைதி நிலையை நேராக,உணர்வு பூர்வமாக,சரியாக உண்மையைக் காணும் அனுபவ நிலை என்று சொல்லலாம். 51 சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் , யோகத்தைப் பற்றியும்,சமாதி நிலையைப் பற்றியும் அந்த நிலையை எட்டும் முறையைப் பற்றியும் பதஞ்சலி முனிவர் விளக்குகிறார்.
2.சாதனா பாதம்: 55 சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் , ஒரு சாதகன் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் விவரிக்கப் படுகின்றன.
இதில் பதஞ்சலி முனிவர் க்ரியா யோகம் , அஷ்டாங்க யோகம் ( எட்டு அங்கங்களையுடைய யோகம்) இரண்டு யோக முறைகளைப் பற்றிக் கூறுகிறார். 
க்ரியா யோகம் என்பது தவம்,இறை நூல்களைக் கற்பது,இறைவன் மேல் பக்தி ஆகிய மூன்றைப் பற்றி பேசுகிறது.
அஷ்டாங்க யோகம் கீழ்க்கண்ட எட்டு யோக அங்கங்களைப் பற்றி கூறுகிறது. கீழ்க்கண்டவற்றில் முதல் 5 அங்கங்கள் சாதனா பாதத்திலும் கடைசி மூன்று அங்கங்கள் விபூதி பாதத்திலும் விவரிக்கப் படுகிறது. 
1.யமம் : (செய்யக் கூடாதவை)
அஹிம்சை(கொல்லாமை),பொய் பேசாமை,கள்ளாமை,பிரம்மச்சர்யம்(வேதம் விதித்தபடி இறை நினைவில் வாழ்வது மற்றும்  உடலாலும் மனதாலும் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளாமை),அபரிகிரகா - தேவைக்கு மேல் பொருள்களின் மீது ஆசைப்படாமை
2:நியமம்:(செய்ய வேண்டுபவை)
தவம்,ஆன்மீகக் கல்வி, இறைவன் பேரில் பக்தி 
3.ஆசனம்:
ஆசனம் என்பது எப்படி அமர்வது என்றும், எதன் மீது அமர்கிறோம் என்ற இருக்கை ஆகிய இரண்டையும் குறிக்கும். பதஞ்சலி முனிவர் எப்படி அமர்வது என்று குறிப்பிடுகிறார். திடமாகவும் சுகமாகவும் இருக்கும் படி அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேலும் ஆசனங்கள் என்பது உடற்பயிற்சிக்காக செய்யும் ஆசனங்களையும் குறிக்கும் இவை யோகாசனம் எனவும் குறிப்பிடப்படும்.
4.பிரணாயாமம்: மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவது: மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஸ்தூல உடலையும், சூட்சும மனதையும் இணைக்கும் கருவியைக் கட்டுப்படுத்துவதாகும்.
5.பிரத்தியாகாரம்: பிரத்தியாகாரம் என்பது புலன்களைக் கட்டுப்படுத்துவது ஆகும். அறிவைக் கொடுக்கும் ஐம்புலன்களான மெய்,வாய்,செவி,மூக்கு,கண் முதலியனவைகளையும் செயல் புலன்களான, கை,கால்,வாக்கு முதலியனவைகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும். ஐம்புலன்களை மூன்று செயல்களுக்குப் பயன்படுத்தலாம். அவை அன்றாட நடைமுறை செயல்களுக்காக அதாவது வியவாகரம், வாகனம் ஒட்டும் பொழுது பார்ப்பது போன்றவை, இரண்டாவதாக இன்பத்திற்காக மூன்றாவது நல்லவைகளுக்காக. வியவாகரத்திற்காக இவைகளைப் பயன்படுத்துவதில் தடையில்லை. ஆனால் இன்பத்திற்காகப் பயன்படுத்தும் பொழுது இவைகளை நல்லவைகளுக்காகப் பயன்படுத்த இயலாமல் போய்விடும். அதலால் இன்பத்திற்காகப் பயன்படுத்துதல் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
6.தாரணம்: ஒரு இடத்தில் மனதை பொருத்துதல். சூட்சுமமான இடங்களில் மனதைப் பொருத்துவது கடினம். ஆதலால் ஒரு தூலமான இடத்தை அனுமானம் செய்து கொண்டு அதனை அடையாளமாக வைத்து அதன் மேல் மனதைப் பொருத்துதல் தாரணம் எனப்படும். இது ஆலம்பனம் எனவும் அறியப்படும்.
7.தியானம்: ஆலம்பன இடத்தில் பொருந்திய மனதை தொடர்ந்து அங்கேயே நிலை நிறுத்தச் செய்யும் முயற்சியே தியானம் எனப்படும். பல எண்ண ஒட்டங்கள் வந்து நிலைநிறுத்தும் முயற்சியை சிதறச் செய்யும். அவற்றைக் கடந்து நிலை நிறுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்வது தான் தியானம் எனப்படும்
8.சமாதி: தியானத்தில் ஒரு முகப்படுத்திய மனதை அதே நிலையில் தொடர்ந்து வைத்தல் சமாதி ஆகும்.இப்படி இடையறாமல் தொடரும் சமாதி நிலையில் த்யானிப்பவர்,த்யானிக்கப் படும் பொருள்,த்யானம் மூன்றும் மறைந்து ஒன்றாகும் நிலை ஏற்படும்.

 3.விபூதி பாதம்: 56  சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் ,யோகத்தால் கிட்டும் சித்திகள் சொல்லப் படுகின்றன. இந்த பாகத்தில். அஷ்டாங்க யோகத்தின் தாரணை,தியானம்,சமாதி என்ற மூன்றும் விவரிக்கப் படுகின்றன.

4.கைவல்ய பாதம்: 34  சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் மோக்ஷம் பற்றி பேசப்படுகிறது


இறை வணக்கம் 



------------------------------------------------

சமாதி பாதம்



விழிப்புணர்வு
Enlightenment 







சாதன பாதம்
பயிற்சி
Practice


சாதனைத் தொடக்கம் & முடுக்கம்







சாதனை கொடுக்கும்



விபூதி பாதம்
பலன்
Results



விபூதியால் கிடைக்கும் 




(இந்தப் பாடலின் விளக்கம்)


கைவல்ய பாதம்
மோக்ஷம்
Liberation